நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 231 மனுக்கள் பெறப்பட்டன.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 231 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 231 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை தாலுகாவை சேர்ந்த அம்பேத்காருக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ஊன்றுகோலை கலெக்டர் வழங்கினார்.
ரூ.1 லட்சத்திற்கான காசோலை...
மேலும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நாகூர் சம்பாத்தோட்டத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் குளத்தில் மூழ்கி இறந்தமைக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பெருங்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை, தேமங்கலம் ஊராட்சி கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவருக்கு கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து நகரும் சிற்றுண்டி தள்ளுவண்டியினையும் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சம்பாத்தோட்டம் பகுதியில் 12 பேருக்கு குடியிருப்பு ஆணையினையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.