மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு
x

கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

ஈரோடு

நம்பியூர் அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.

பொது வழிப்பாதை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தாண்டவமூர்த்தி தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

நம்பியூர் அருகே ஓணான்கரடு கரட்டுப்பாளையம் பகுதியில் பொது வழிப்பாதை பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் அந்த பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இது தொடர்பாக கோபி ஆர்.டி.ஓ., கோபி தாசில்தார் ஆகியோரிடம் புகார் மனு அளித்தோம். அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு, வழிப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டனர். அங்கு தடுப்பு வேலி அமைக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அந்த இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்றால், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

210 மனுக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி இளங்கோ கொடுத்த மனுவில், "பெருந்துறை தாலுகாவில் 15.36 ஏக்கர் நிலம் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1963-ம் ஆண்டும், 1966-ம் ஆண்டும் அந்த இடத்தில் 2¾ ஏக்கர் நிலம் உயர் சாதியினரால் கிரையம் செய்யப்பட்டு உள்ளது. அதில் வாரிசு அடிப்படையில் எனக்கு பாத்தியப்பட்ட நிலமும் உள்ளது. இதுதொடர்பாக பெருந்துறை தாசில்தாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்னுடைய நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்", என்றார்.

இந்த கூட்டத்தில் அடிப்படை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 210 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இரு கால்கள் செயல் இழந்த 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 632 மதிப்பிலான ஏர் பெட்டுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவையும் அவர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story