மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

ராம்நகர் நலச்சங்க தலைவர் கந்தையா தலைமையில் நிர்வாகிகள் கவுன்சிலர் வில்சன் மணித்துரையுடன் வந்து மேயரிடம் மனு கொடுத்தனர்.

அதில், ராம்நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. அந்த பகுதி மக்கள் மாநகராட்சி குடிநீரையே நம்பி உள்ளனர். தற்போது குடிநீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.

நெல்லை மாநகர வியாபாரிகள் சங்க தலைவர் குணசேகரன், நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்க தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் டவுன் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ''வருகிற 5-ந் தேதி டவுனில் சக்தி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 35 சப்பரங்கள் வீதி உலா நடைபெற உள்ளது. எனவே டவுன் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிகளால் சேதம் அடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்'' என்று கேட்டு உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொடுத்த மனுவில், டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் அமைந்திருக்கும் கோடகன் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர். பழைய பேட்டை சரோஜினி புது தெரு பொது மக்கள் அளித்த மனுவில், தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றி மின் விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்'' என்று கூறிஉள்ளனர். கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, பைஜூ, மாநகர நல அலுவலர் ஆனி குயின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story