அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு கூட்டம்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
அடிப்படை வசதிகளுடன்
கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும். கிராமத்தில் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர்ந்திட இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் சென்றுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
கிராமப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சமூக பணியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பராமரிப்பு தொகை
மின்னல் ஊராட்சியை சேர்ந்த 3 மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வீடு பழுதடைந்துள்ளது குறித்து உதவி கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதனடிப்படையில் உடனடியாக அவர்களுக்கு தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து வீடு பராமரிப்பு பணிகளுக்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, அரக்கோணம் ஒன்றியக் குழுத்தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து தணிகைபோளூர் கிராமத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நரிக்குறவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர். தொடர்ந்து அங்கு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.