விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தகவல்
களக்காடு யூனியன் பகுதியில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இட்டமொழி:
களக்காடு யூனியன் பகுதியில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இலைக்கருகல் நோய்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு யூனியனில் உள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ள னர். இவர்கள் அனைவரும் வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து வேளாண்மை அதிகாரிகள் களக்காடு பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இலைக்கருகல் நோயால் பாதிப்படைந்த வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். இதன் தொடர்ச்சியாக இலைக்கருகல் நோய் பாதிப்புக்கு உள்ளான வாழை பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை
இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வாழையில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ஏக்கர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. விவசாயப்பெருமக்கள் தங்களது பட்டா, சிட்டா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த உரிய ஆவணங்களுடன் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வேளாண் துறையில் மனு கொடுத்து ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள இந்த ஊக்கத்தொகை சிறிய தொகைதான். இது அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிவிடாது.
எனவே இதுபற்றி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதேவேளையில் வாழையில் ஏற்பட்டுள்ள இலைக்கருகல் நோய் பாதிப்பை சரிசெய்ய, இம்மாதம் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சியில் உள்ள வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் நாங்குநேரிக்கு வருகிறார்கள். இவர்கள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட வாழைப் பயிர்கள் மீது ட்ரோன் மூலம் நோயை விரட்டும் மருந்தை தெளிக்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.