பெரம்பலூரை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றலாம்
கிராம காவல் திட்டத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றினால் பெரம்பலூரை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி கூறினார்.
"கிராம காவல்" திட்டம்
பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முதல் முறையாக "கிராம காவல்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கடந்த 24-ந் தேதி அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து போலீசாருடனான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி போலீசாரிடையே பேசுகையில், கிராம காவல் திட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு போலீஸ்காரரும் பொதுமக்களுடன் இணக்கமாகவும், நண்பர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தும், குற்றங்கள் நடக்க ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா? என்பது பற்றி கேட்டறிந்தும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணியாற்றினால் பெரம்பலூரை குற்றம் இல்லாத மாவட்டமாக மாற்ற வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தப்படும். சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.
வாட்ஸ்-ஆப் குழு
கடமைக்கு பணி புரியும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை கண்காணிக்க கிராமத்திற்கு தலா ஒரு போலீஸ்காரரை நியமித்து, அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் முக்கியமான நபர்கள், சமூக நலனில் அக்கறை கொண்ட நபர்கள் மற்றும் கிராம போலீசார் என அனைவரையும் ஒருங்கிணைத்து வாட்ஸ்-ஆப் குழு தொடங்கப்பட்டது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் சரகம்), சீராளன் (மங்களமேடு சரகம்), தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.