பெரம்பூர் சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரம்பூர் சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரம்பூர் சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தட்சனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன், சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று மயில் வாகனமாக இருக்கின்ற தலமாக விளங்கி வருகிறது.
இங்கு தட்சிணாமூர்த்தி தட்சண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.
யாகசாலை பூஜை
ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இந்தகோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா கடந்த 23-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி நடந்து விழாவின் முக்கிய நாளான நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.
குடமுழுக்கு
தொடர்ந்து 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஆய்வாளர் கண்ணதாசன், குலதெய்வக்காரர்கள், கிராமமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.