சாமி வேடம் அணிந்து பங்கேற்ற கலைஞர்கள்
வண்டி கருப்பணசாமி கோவிலில் நடந்த வருடாந்திர பூஜையில், சாமி வேடம் அணிந்து கலைஞர்கள் அசத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 14-வது ஆண்டு வருடாந்திர பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மேடை நடன கலைஞர்கள் கோவிலில் குவிந்தனர்.
இவர்களில் சில கலைஞர்கள் கருப்பணசாமி, அய்யனார், பத்ரகாளியம்மன், மாரியம்மன், நீலியம்மன், ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்து அசத்தினர். பக்தி பரவசத்துடன் இவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதேபோல் கட்டைக்கால் ஆட்டம், நாசிக் டோல், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. சிறுவர்கள் கட்டைக்கால் ஆட்டம் மற்றும் பறையாட்டம் ஆடியதையும், ஊர்வலமாக வந்த நடன கலைக்குழுவை சேர்ந்த பெண்கள் குத்தாட்டம் போட்டபடி நடனமாடி வந்ததையும் அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.