கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது-ரகு, பொம்மி யானையின் தத்ரூப உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. இதில் ரகு, பொம்மி யானையின் தத்ரூப உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கூடலூர்
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. இதில் ரகு, பொம்மி யானையின் தத்ரூப உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
வாசனை திரவிய கண்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
கண்காட்சியில் வாசனை திரவிய பொருட்களால் வடிவமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து தோட்டக்கலை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது தோட்டக்கலை அரங்கில் ஷாஜீரகம் 45 கிலோ, சீரகம் 5 கிலோ, கருஞ்சீரகம் 3 கிலோ, வெந்தயம்- சோம்பு, கசகசா தலா 10 கிலோ, ஏலக்காய், கிராம்பு, மிளகாய் விதை, குறுமிளகு, மராட்டி முக்கு தலா 2 கிலோ, ஜாதிபத்திரி ஸ்டார் அனீஸ் தலா ஒரு கிலோ என மொத்தம் 95 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு ஆஸ்கார் விருது பெற்ற தி எலிெபன்ட் விஸ்பெரரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பிடித்த முதுமலை வளர்ப்பு யானைகள் ரகு, பொம்மி மற்றும் ஆஸ்கார் விருதுடன் பாகன்கள் பொம்மன், பெள்ளி இணைந்து நிற்பது போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆர்வமுடன் ரசித்தனர்
இதை அதிகாரிகள், பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர். தொடர்ந்து வனத்துறை அரங்கில் சிறுத்தை புலி, கரடி குட்டிகள், குட்டி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மலை நீர்வீழ்ச்சியில் புலி படுத்து கிடப்பது போல் இயற்கை காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவு பொருட்களைக் கொண்டு கடலில் இருந்து டால்பின் துள்ளி குதிப்பது போல் சிற்ப கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
50-க்கும் மேற்பட்ட அரங்குகள்
முன்னதாக தன்னார்வ அமைப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் நடந்த கோடை விழா தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் அரசு நலத்திட்டங்கள் அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மண்எண்ணெய் குறைவாக வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இப்பகுதியில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4 லிட்டர் மண்எண்ணெய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தேவாலா பண்ணையில் இன்னும் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. சில கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கூடலூர் தாசில்தார் சித்ராஜ் நன்றி கூறினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.