பெரியகுளம் கடைவீதியில்சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் :வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
பெரியகுளம் கடை வீதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் கடைவீதி உள்ளது. இந்த கடைவீதி பகுதியில் காந்தி சிலை முதல் மாரியம்மன் கோவில் வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது மாரியம்மன் கோவில் முதல் பெருமாள் கோவில் வரை பேவர் பிளாக் கற்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் நகர வியாபாரிகள் சங்கத்தினர், அ.தி.மு.க. நகராட்சி குழுத் தலைவர் சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அதில், விடுபட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்காமல் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கூறியிருந்தனர்.
இதையடுத்து நகராட்சி அ.தி.மு.க. குழுத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேலு, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று தலைவர் சுமிதா சிவக்குமாரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில், மாரியம்மன் கோவில் முதல் பெருமாள் கோவில் வரை சிமெண்டு சாலை அல்லது தார்சாலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.