40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
சிவகங்கை மாவட்டத்துக்கு இன்று (புதன்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, காரையூரில் நடக்கும் விழாவில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
சிவகங்கை,
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
கலைஞர் நூலக கட்டுமான பணி
இதற்காக நேற்று மாலை மதுரைக்கு விமானத்தில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நத்தம் ரோட்டில் ரூ.120 கோடியில் கட்டப்படும் பிரமாண்ட கலைஞர் நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இரவில் மேலூரில் உள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலையில் கார் மூலமாக அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் புறப்படுகிறார்.
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைபட்டிக்கு 9.45 மணிக்கு சென்றடைகிறார். அங்கு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார்.
40 ஆயிரம் பயனாளிகளுக்கு....
கோட்டை வேங்கைபட்டியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர் அருகே காரையூருக்கு 11 மணிக்கு செல்கிறார். காரையூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு ஏற்கனவே நிறைவு பெற்ற புதிய திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவின் மூலம் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்துக்கு வருவதைெயாட்டி தி.மு.க. மாவட்ட செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காரையூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு, புதுக்கோட்டை சென்று அங்கு நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசுகிறார். புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.