ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிர்ச்சி தகவல்
ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிர்ச்சி தகவல் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு ஆகிய மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு பதில் அளித்து அந்த துறையின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
வருவாய்த்துறை நமது அன்றாட வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் துறை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில் 4.65 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இது மிக அதிகம். 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது 785 விண்ணப்பங்கள் தான் உள்ளன. நிலுவை விண்ணப்பங்களை பார்த்து மாவட்ட கலெக்டரே அதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம்
முதியோர் ஓய்வூதியத்தை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். முதல்-அமைச்சரின் கள ஆய்விலும் இதில் அக்கறை காட்டுகிறார். 36 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். இறந்தவர்கள், அதிக சொத்துகளை வாங்கினவர்கள், 2 ஓய்வூதியம் வாங்கியவர்கள் என்று 3 லட்சம் பேருக்கு அதை நிறுத்தி விட்டனர்.
ஆனால், ஆன்லைனில் வந்த விண்ணப்பங்களை எடுத்து நேரில் சென்று சரிபார்த்து 1.65 லட்சம் பேருக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கினோம். சரியான காரணத்திற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை அரசுக்கு எடுக்காமல், அடுத்த பதிவு மூப்பு விண்ணப்பதாரருக்கு அதை அளிக்கிறோம்.
வறுமை பட்டியலில் உள்ளவர்களுக்குத்தான் அளிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்த பட்டியல் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. ஆனால் பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் தீர்மானம் போட்டு கொடுத்தால் ஓய்வூதியம் வழங்கலாம் என்றும் சட்டம் உள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் இந்த வழியையும் பாருங்கள். ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுத்தால், உங்களுக்கும், எனக்கும், முதல்-அமைச்சருக்கும் புண்ணியம் வந்து சேரும். எனவே இதில் உங்களுடன் அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
மாதத்தில் 2-வது புதன்கிழமைகளில் கிராமங்களுக்கு கலெக்டர்கள் சென்று மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என்பது கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. எனவே அதை கலெக்டரிடம் கேட்டு நீங்களும் அவருடன் சென்று ஆய்வு செய்யுங்கள்.
வீட்டுமனை பட்டா
வீட்டுமனை பட்டாவை பொறுத்தவரை அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா கொடுக்க முடியாது. ஆனால் அரசு கிராம புறம்போக்கு நத்தம் என்ற பிரிவு நிலமாக இருந்தால் பட்டா கொடுக்கலாம். அதற்கான வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதிலும், சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டா பிரச்சினையை பெரிதாக பேசுகின்றனர். ஏனென்றால் மக்களுக்கு நாம் தேர்தலின்போது அளித்த உறுதி அது.
சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் உள்ள பட்டா பிரச்சினை தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின்பு அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி பிரச்சினைகள் சரி செய்யப்படும். அவர்களிடம் நேரடியாக குறைகளை கூறுங்கள்.
'பெல்ட் ஏரியா' என்பது 1962-ம் ஆண்டில் போடப்பட்ட சட்டம். 'பெல்ட் ஏரியா'வில் பலர் குடியிருக்கின்றனர். இதுபற்றியும் அதிகாரிகளுடன் நாம் கூடி பேசுவோம். பின்னர் முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்போம்.
நரிக்குறவர்கள், இருளர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 48 ஆயிரம் இருளர்கள் மற்றும் நரிக்குறவர்கள் குடும்பங்களை கண்டறிந்து 33 ஆயிரத்து 677 பட்டா கொடுக்கப்பட்டு உள்ளன. பட்டா இருந்தாலும் அவர்களால் வீடு கட்ட முடியாது. எனவே வீடு கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரியார் வீட்டுக்கே...
பட்டா வழங்குவதை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை. நம்ப முடிகிறதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அவருக்காக ஓட்டு கேட்கப்போகும்போது, அவர் என்னிடம் முதலில் கேட்டது பட்டாவைத்தான். பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை. இது முதல்-அமைச்சருக்கே அதிர்ச்சியாகிவிட்டது. இவ்வளவு பெரிய ஆட்கள் எப்படி விட்டார்கள்? என்று கேட்டார்.
அங்கு 7 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா இல்லை. இப்போது அனைவருக்கும் பட்டா கொடுக்க போகிறோம். 10 ஆண்டுகளாக அதை விட்டுவிட்டனர். இப்போது அதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.