நிலையூர் கண்மாயில் விரிசல்: 300 மணல் மூடைகளால் மடை சீரமைப்பு
நிலையூர் கண்மாயில் விரிசல் காரணமாக 300 மணல் மூடைகளால் மடை சீரமைப்பு பணி நடைபெற்றது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தொடர் மழையாலும், சமீபத்தில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நிரம்பி கடல்போல காட்சி அளிக்கிறது. தற்போது கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் விவசாய பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் கண்மாயின் பிரதான சிறிய மடை தீடீரென்று விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதை பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் அவர்கள் தண்ணீர் கசிவை தடுக்க போராடினர்.
இந்த நிலையில் திருமங்கலம் சரக ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சவுந்தரியா உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் பார்த்தீபன் மேற்பார்வையில், ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு சிறிய மடை பகுதி முழுவதுமாக செம்மண்ணை பரப்பி சமதளப்படுத்தப்படுத்தி தண்ணீர் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வெளியில் இருந்து டிராக்டர்கள் மூலம் 300 மணல் மூடைகள் கொண்டுவரப்பட்டு சிறிய மடையை சுற்றி நாலா புறமுமாக அடுக்கி சீரமைத்தனர். இந்த பணியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டனர். பொதுப்பணி துறை உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சேது கந்தவேல், பொதுப்பணித்துறை ஆய்வாளர் கென்னடி, பாசன உதவியாளர் பாலசந்தர் ஆகியோர் இந்த பணியினை ஆய்வு செய்தனர்.