குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனை கூட்டம்
ராஜபாளையத்தை அடுத்த செட்டியார்பட்டி மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் சந்திரகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆகையால் குடிநீர் பிரச்சினை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கிணறு தூர்வாரப்படும்
இதுகுறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
சாஸ்தா கோவில் நீர் ஏற்றும் பகுதியில் பணியாட்களை முறையாக நியமித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வரும் இடத்தில் அனைத்து பணிகளையும் முடித்த பிறகு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும். அதேபோல சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்ட கிணறுகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சுகாதரப்பணி மற்றும் தெரு விளக்கு வசதியை முறையாக செயல்படுத்தினால் பொதுமக்கள் பாராட்டுவார்கள்.
அடிப்படை வசதி
ஆகவே மேற்கண்ட அடிப்படை வசதி முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல சேத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்க தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தினால் சேத்தூர் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், துணை தலைவர் விநாயகமூர்த்தி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் குமார், பேரூர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.