டயாலிசிஸ் சிகிச்சைக்கு நிரந்தர டெக்னீசியன்களை நியமிக்க கோரிக்கை


டயாலிசிஸ் சிகிச்சைக்கு நிரந்தர டெக்னீசியன்களை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நிரந்தர டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நிரந்தர டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டயாலிசிஸ்

சிறுநீரக டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சையானது முக்கிய உயிர்காக்கும் சிகிச்சையாக கருதப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, மருத்துவ பணியாளர் தேர்வு மையம் (எம்.ஆர்.பி.) மூலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 160 டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஓராண்டு பணியை மேற்கொண்டனர். அதனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறுநீரக நோயாளிகளுக்கு தரமான டயாலிசிஸ் சிகிச்சை கிடைக்கப்பெற்று வந்தது.

இந்தநிலையில், ஓராண்டு முடிந்தபிறகு 160 டெக்னீசியன்களுக்கு பணி ஒப்பந்தம் நீட்டிக்காமல் மறுபடியும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியமிக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தமட்டில், சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வந்த 9 எம்.ஆர்.பி. பணியாளர்கள், வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நிலைமையை சமாளிக்க முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு நிதியை பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 4 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோல், பயிற்சி மாணவர்களை கொண்டு சிகிச்சை அளிப்படுகிறது.

இதன் எதிரொலியாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில் 50 எந்திரங்களுக்கு 4 தற்காலிக டெக்னீசியன்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் டெக்னீசியன்களை அனுபவம் மற்றும் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உடனடியாக பணியமர்த்தப்பட்டு ஏழை நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கபெற செய்யவேண்டும் என்றனர்.


Next Story