ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
நீர்வரத்து குறைந்தது
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த 15-ந் தேதி தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பரிசல் இயக்க அனுமதி
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை கலெக்டர் சாந்தி நீக்கி உத்தரவிட்டார். இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்த போதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.