அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்
ஆழித்தேரோட்டத்தையொட்டி அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
ஆழித்தேரோட்டத்தையொட்டி அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
அன்னதானம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த தேரோட்டத்தையொட்டி ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆழித்தேரோட்டத்தின் போது கடந்த ஆண்டு 20 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 30 இடங்களிலும், 5 மண்டபங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். அன்னதானம் கொடுக்கும் போது மக்கள் கூட்டம் அதிகம் சேரும், அதனால் அன்னதானம் வழங்குபவர்கள் முக கவசம் அவசியம் கொடுக்க வேண்டும்.
பார்சல் வழங்க வேண்டும்
மேலும் உணவுகளை வழங்குபவர்கள் மர இலை மற்றும் பிளாஸ்டிக் தட்டுகளில் வழங்காமல் பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதால் உணவுகள் வீணாவதை தடுக்கலாம். மேலும் உணவுகள், சாலையில் சிந்துவதை தவிர்க்க முடியும். கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
அன்னதானம் வழங்கும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உதவிகள் தேவைப்பட்டால் போலீசார் உதவியை நாடலாம் என்றார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெகதீஸ்வரன், போலீசார் மற்றும் அன்னதானம் வழங்குபவர்கள் கலந்து கொண்டனர்.