உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி
என்.எல்.சி.க்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என உழவர் பேரியக்கம், பா.ம.க.வினர் மனு கொடுத்தனா்.
கடலூர்:
தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துக் கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:-
நெய்வேலி பகுதியில் விளைநிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தி வருவதை கண்டித்து வடலூரில் வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன. இந்த போராட்டம் நடைபெறுவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவை சொல்வதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.