வேறு தொழில் தொடங்க அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும்
ஸ்டெர்லைட் ஆலையின் இடத்தில் வேறு தொழில் தொடங்க அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்த மாணவன் பரத்தை புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட்ட பின் சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ''சம்பவம் நடந்த கட்டிடத்தை உடனடியாக முழுமையாக அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டமாக சேதமடைந்த கட்டிடங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பள்ளி கட்டிடங்களை முழுமையாக பராமரிக்காமல் இருந்தது தான். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை அறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேதாந்தா நிறுவனம் ஸ்டொ்லைட் ஆலையை விற்க முடிவு செய்திருப்பது பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் விற்றால் வாங்குகிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை. முதல்-அமைச்சர் எடுத்த நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். அந்த இடத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வேறு நிறுவனம் தொழில் தொடங்க இருந்தால் அனுமதி கொடுப்பது பற்றி எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும். 187 நாடுகள் பங்கேற்கும் விளையாட்டான செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நாடு முழவதும் 75 நகரங்களுக்கு சென்று ஜூலை மாதம் 28-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும்'' என்றார். அதன்பின் புதுக்கோட்டை அய்யனார் திடலில் வருகிற 26-ந் தேதி தி.மு.க. இளைஞர்அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.