"பண மதிப்பிழப்பு, கொரோனா தொற்று போன்ற சவால்களை தாண்டி வெற்றி பெற விடாமுயற்சி, தன்னம்பிக்கையே காரணம்":கனிமொழி எம்.பி.


பண மதிப்பிழப்பு, கொரோனா தொற்று போன்ற சவால்களை தாண்டி வெற்றி பெற விடாமுயற்சி, தன்னம்பிக்கையே காரணம்:கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

“பண மதிப்பிழப்பு, கொரோனா தொற்று போன்ற சவால்களை தாண்டி வெற்றி பெற விடாமுயற்சி, தன்னம்பிக்கையே காரணம்” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி

"பண மதிப்பிழப்பு, கொரோனா தொற்று போன்ற சவால்களை தாண்டி வெற்றி பெற விடாமுயற்சி, தன்னம்பிக்கையே காரணம்" என்று கனிமொழி எம்.பி கூறினார்.

ரூபி ஜூபிளி விழா

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சாதனை படைத்த தொழில் அதிபர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

தபால்தலை வெளியீடு

விழாவில் ரூபி ஜூபிளி விழா சிறப்பு தபால்தலை மற்றும் தபால் உறையை மதுரை மண்டல தபால்துறை தலைவர் ஜெயசங்கர் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

ஒரு நிறுவனத்தை 40 ஆண்டுகளாக நடத்துவது சவாலான ஒன்று. பல நிறுவன தலைவர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறீர்கள். தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருகாலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த மாவட்டத்தில், நம் முன்னோர்கள், முன்னோடிகள் மிக தைரியமாக தொழில் முதலீடுகளை செய்து உள்ளனர். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

விடாமுயற்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புககள் உருவாக வேண்டும், தொழில் முதலீடுகள் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்.

தொழில் முனைவோர்கள் இந்த பகுதியில் உருவாக வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்து உள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், எஸ்.இ.பி.சி. அனல்மின்நிலைய தலைமை அதிகாரி நரேந்திரா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க பொதுச் செயலாளர் சங்கர்மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம்பால் நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story