கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தனிப்படை விரைந்தது
நகைக்கடை ஊழியரிடம் ரூ.2 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை மேலவீதியை சேர்ந்தவர் மணி (வயது 52). இவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் சென்னை என்.எஸ்.பி. ரோட்டில் உள்ள மொத்த நகை வியாபார கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்ட இவர் தஞ்சைக்கு வந்தார்.
இங்கே தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 31-ந் தேதி இரவு சாப்பிட சென்றார். அப்போது இவர் கொண்டு வந்த 5 கிலோ புதிய நகைகள், 1 கிலோ 200 கிராம் உருக்கப்பட்ட தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கம் இருந்த பையை சீருடையுடன் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். கொள்ளைபோன நகையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும்.
கண்காணிப்பு கேமரா
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வணிக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சீருடைகளுடன் சிலர் ஓடும் காட்சி பதிவாகி இருக்கிறது.
போலீசார் மூலம் மாநகரில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள், கொள்ளையடித்துவிட்டு எங்கே சென்றார்கள் என போலீசாரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தோலும் வணிக நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை கொண்டு விசாரணை செய்தபோது அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என போலீசார் கருதுகின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானாவுக்கு விரைந்த தனிப்படை
கொள்ளையர்களில் 3 பேரின் உருவம் மட்டும் சற்று தெளிவாக பதிவாகி உள்ளது. அவர்களது முகச்சாயலை வைத்து கொள்ளையர்கள் ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் அவர்களை தேடி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.