மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுவருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்ககூடாது.

உதவித்தொகை பெற முதல் முறையாகவிண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பபடிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story