பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்கியது
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளது.
மழை நீடிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று காலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் காலையில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கையில் குடை பிடித்தபடி நடந்து சென்றனர்.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 20.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-1.4, கன்னிமார்-1.2, குழித்துறை-4.4., மயிலாடி-2.8, நாகர்கோவில்-3, புத்தன்அணை-2.2, சுருளகோடு-2.6, தக்கலை-8.4, பாலமோர்-16.8, ஆரல்வாய்மொழி-1.2, கோழிப்போர்விளை-7.2, அடையாமடை-3, குருந்தன்கோடு-9, முள்ளங்கினாவிளை-12.2, ஆனைகிடங்கு-8.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணை நிலவரம்
தொடர்ந்து தண்ணீர் வருவதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.63 அடியாக இருந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும்.
இதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 75 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.