பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தாராபுரம், காங்கயம், முத்தூர் பகுதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அதன்படி தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் எழுந்தருளி உள்ள உத்தர வீரராகவப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை பெருமாள் ஸ்ரீதேவி, பூலான் தேவி, சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.பிறகு காலை 6.15 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் 4 மணிக்கு அமராவதி ஆற்றில் நீராடி வீரராகவப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கண்டு கழிக்க கொட்டும் பணியினை பொருப்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏகதாசி மண்டபத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார். தாராபுரம், மூலனூர், குண்டடம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை வருகை தந்து கொட்டும் பனையில் காத்திருந்த திரளான பக்தர்கள் பரமாபத வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர்.
காங்கயம்
காங்கயம் நகரம், பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்டரமண சாமி கோவிலில் வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சாமிதரிசனம் செய்து விட்டு வடக்குப்புறம் உள்ள சொர்க்க வாசல் வழியாக சென்றார்கள். மேலும் சாமி திருவீதிவுலா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல பாப்பினி கிராமம் மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரமபிக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 5.30 மணிக்கு சாமி சொர்க்க வாசல் வழியாக கருட வாகனத்தில் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து திருவீதிவுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முத்தூர்
முத்தூர் பூமாதேவி, சீதேவி சமேத மாதவராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மாதவராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளியவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று வணங்கி ஆசி பெற்றனர். தொடர்ந்து காலை 5.45 மணிக்கு மாதவராஜ பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வரதராஜ பெருமாள் கோவில்
வெள்ளகோவிலில் வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோவில் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு மட்டும் அபிஷேகங்கள் நடைபெற்றன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன, இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.