பாலசமுத்திரம் பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


தினத்தந்தி 27 Aug 2023 2:30 AM IST (Updated: 27 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் பிரசித்திபெற்ற அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர், கொடிமரம், கொடிப்படம் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் கொடிப்படம் உட்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பினர்.

கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரம், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் பொறியாளர் குமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் வருகிற 1-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3-ந்தேதியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story