பெருமாள் கோவில் பூட்டை உடைத்து 7 சாமி சிலைகள் திருட்டு


பெருமாள் கோவில் பூட்டை உடைத்து 7 சாமி சிலைகள் திருட்டு
x
சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து 7 சாமி சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெருமாள் கோவில்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர் சாவடி அருகே பழமைவாய்ந்த பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் பூசாரியாக உள்ளார். இந்த கோவிலில் ¾ அடி உயரம் கொண்ட பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், ½ அடி உயரம் கொண்ட 5 சாமி சிலைகளும் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு பூசாரி குமரவேல், கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலுக்கு வந்தார். அங்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சாமி சிலைகள் திருட்டு

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 7 சாமி சிலைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் இருந்த கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது.

கோவிலில் சாமி சிலைகள் திருட்டு போன தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த சாமி சிலைகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story