மேல்புவனகிரி பகுதியில் நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் - அதிகாரிகள் ஆய்வு
மேல்புவனகிரி பகுதியில் நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி வட்டாரத்தில் சுமார் 2,600 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் நன்கு பராமரித்து வந்த நிலையில், தற்போது தூர்கட்டும் பருவத்தில் இலைப்பேன், சிலந்தி மற்றும் பாக்டீரியல் இலை கருகல் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மேல்புவனகிரி வட்டார வேளாண்மை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று பு.ஆதனூர், வீரமுடையாநத்தம், தட்டானோடை, அகரம் ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இலைப்பேன், பாக்டீரியல் இலைக்கருகல், இலை சுருட்டுப்புழு மற்றும் சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், பூச்சியியல் துறை பேராசிரியர் செங்குட்டுவன், நூற்புழுவியல் பேராசிரியர் ஜெயக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர், வேளாண்மை உதவி இயக்குனர் முகமது நிஜாம், துணை வேளாண்மை அலுவலர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.