ஏற்காட்டில் கோடை விழாசுற்றுலா பயணிகளை கவர்ந்த செல்லப்பிராணிகள் கண்காட்சிபுல்லிகுட்டா வகை நாய் சாம்பியன் பட்டத்தை வென்றது
ஏற்காடு
ஏற்காடு கோடை விழாவில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. போட்டியில் புல்லிகுட்டா வகை நாய் சாம்பியன் பட்டத்தை வென்றது.
செல்லப்பிராணிகள் கண்காட்சி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள முக்கிய மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு கடந்த ஒரு வாரமாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மலர் கண்காட்சி மற்றும் இயற்கை அழகு காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோடை விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கால்நடை துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்ட், டாபர்மென், லேபர்ட், பொம்மேரியன், கிரேடன், பாக்சர், டால்மேசன், டெரியர் அஸ்கி, பின்டு, சுவாகா மற்றும் நாட்டு இன நாய்கள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பொங்கலூர் காளைகள், அசாம் குட்டை வகை ஆடுகள், டோனி குட்டை குதிரை, கரந்தை ஆடுகள், பெர்சியன் பூனை வகைகள், பல்வேறு வகை சேவல்கள், புறா, முயல், பறவைகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
சாகச நிகழ்ச்சிகள்
கண்காட்சியில் குற்றவாளிகளை மோப்பம் பிடிக்கும், வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் போலீஸ் வளர்ப்பு நாய்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்த குழந்தைகளிடம் போலீஸ் துறை மோப்ப நாய்கள் விளையாட்டு காட்டின. காண்போர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீஸ் வளர்ப்பு நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
இதற்கிடையே வளர்ப்பவரின் சொல்லுக்கு கீழ்படியும் செல்லப்பிராணிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வளர்ப்பு நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் புல்லிகுட்டா இன வகை நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
போக்குவரத்து நெரிசல்
செல்லப்பிராணி கண்காட்சி மற்றும் கோடை விழாவை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் நேற்று முழுவதும் மழை இல்லாததால் சாலையோர கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடந்தது.கோடை விழா இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு விழா மாலையில் நடக்கிறது.