ரூ.30 கோடி செலவில் பெட் ஸ்கேன் புதுப்பிப்பு
அரசு ஆஸ்பத்திரியில் ரூ.30 கோடி செலவில் பெட் ஸ்கேன் புதுப்பிக்கப்பட்டதை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையத்தினையும், போதை மறுவாழ்வு மையத்தினையும், புதுப்பிக்கப்பட்டு உள்ள புற்றுநோய் பரவல் பற்றி கண்டறிய உதவும் கருவி மையத்தையும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நெல்லை அரசு ஆஸ்பத்திரயில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோயாளிகளுக்கு புற்றுநோய் பரவல் பற்றி கண்டறிய உதவும் பெட் ஸ்கேன் என்ற கருவியை உள்ளடக்கிய மைய கட்டிடம் சுமார் ரூ.30 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பெட் ஸ்கேன் செயல்பாடுகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் கோகுல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிசந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.