பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


பேச்சிப்பாறை அணையில் இருந்து   தண்ணீர் திறப்பு
x

பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீரை கலெக்டர் அரவிந்த் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீரை கலெக்டர் அரவிந்த் திறந்து வைத்தார்.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன திட்ட பகுதிக்கு ஜூன் 1-ந் தேதி முதல் 28-2-2023 வரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

தண்ணீர் திறப்பு

அதன்படி கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை காலை 11.15 மணிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டது. பாசனக்கால்வாயில் வெளியேறிய தண்ணீரில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் விவசாயிகள் நெல் மணிகளையும், பூக்களையும் தூவினர்.

முன்னதாக பேச்சிப்பாறை அணை அருகிலுள்ள பேச்சியம்மன் கோவிலிலும், அணையின் மதகுப் பகுதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

79 ஆயிரம் ஏக்கர்

அதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவுப்படி கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கு கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேவைக்கேற்ப பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளில் வரும் நாட்களில் திறக்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற வேண்டும்.

மாவட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் விடுபட்டுள்ள பணிகள் இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் செய்து முடிக்கப்படும். மாவட்டத்தில் அணைகள் அனைத்தும் நிரம்பிக் கிடக்கும் நிலை மற்றும் தென்மேற்கு பருவ மழை எதிர்வரும் நாட்களில் பெய்யும் நிலை காரணமாக மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையிலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தாழ்வான பகுதிகளான வைக்கல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆற்றுத் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகாத வகையில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

இதில் விஜயகுமார் எம்.பி., பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் மெல்கி சதேக், உதவிப் பொறியாளர் லூயிஸ் அருள் செழியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட பாசனத்தார் சபை தலைவர் வின்ஸ் ஆன்றோ, முன்னோடி விவசாயிகள் புலவர் செல்லப்பா, செண்பக சேகர பிள்ளை, பெரிய நாடார், பத்மதாஸ், ஹென்றி, விஜி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

70 சதவீதம் நீர் இருப்பு

தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே அணைகள் அனைத்தும் ஏறக்குறைய நிரம்பிய நிலையில் உள்ளன. 1-ந்தேதி நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.05 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 56.80 அடியாகவும், சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 13.05 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 13.15 அடியாகவும் இருந்தது. மொத்தமாக இந்த அணைகளில் 5815.75 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது இந்த அணைகளின் மொத்த கொள்ளளவான 8233 மில்லியன் கன அடிக்கு 70.63 சதவீதமாகும். இந்த அளவு தண்ணீர் இருப்பு மற்றும் தென்மேற்கு பருவ மழை பெய்ய உள்ள நிலையில், நடப்பாண்டில் கன்னிப்பூ சாகுபடியை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.


Next Story