கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நல சங்கம் சார்பில் தலைவர் செல்வம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் கால்நடைகள் உள்ளன. இப்போது கால்நடைகளுக்கு லம்பி வைரஸ் மற்றும் கோமாரி நோய் பரவி வருகிறது. எனவே கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மஞ்சு விரட்டு, எருது விடும் விழாவில் நாட்டு இன மாடுகள் அதிகமாக கலந்து கொள்கின்றன. அவ்வாறு நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு பலவிதமான உபாதைகள் ஏற்படுகின்றன. இதற்கு உயர் சிகிச்சைகள் தேவைப்படுகிறது. நமது மாவட்டத்தில் சிகிச்சை அளிக்க போதிய உபகரணங்கள் இல்லாததால் நாமக்கல் மாவட்டத்திற்கு கால்நடைகளை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல மாடுகள் இறந்து போகும் சூழல் உள்ளன.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி அளிக்கும் பட்சத்தில் நமது மாவட்டத்தை ஒட்டி உள்ள திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கால்நடைகளும் பயன் பெறும். எனவே கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.