கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, தொழில் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் மொரப்பூர், கம்பைநல்லூர் வட்டார பகுதிகளை சேர்ந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் 20 பேர் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவும், ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காலத்தில் பணிபுரிந்ததற்கான நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.