மத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கிருஷ்ணகிரி:
மத்தூர் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிராம மக்கள் மனு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்டது சவுளுக்கொட்டாய். இந்த கிராமத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள, இந்த கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக மத்தூர், போச்சம்பள்ளி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
சாலை வசதி வேண்டும்
இந்தநிலையில், இந்த கிராமத்திற்கு சென்று வர போதிய சாலை வசதி இல்லை. இதனால், கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சவுளுக்கொட்டாய் கிராம வளர்ச்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் நலன் கருதி, உடனடியாக சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.