கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 346 மனுக்கள் பெறப்பட்டன
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 346 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித் தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 346 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ரூ.10 லட்சம்
தொடர்ந்து தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மாங்காய், தென்னை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு மானியமும், ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் தக்காளி, தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க மானியம் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் காசோலைகளை வழங்கினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.