தர்மபுரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டர் அலுவலகத்தில் மனு


தர்மபுரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கடும் எதிர்ப்பு

தர்மபுரி அருகே மான்காரன்கொட்டாய் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாயக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சோலைக்கொட்டாய் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, டாக்டர் ராமதாஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரி, மின்வாரிய அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

விபத்துகள் ஏற்படும் அபாயம்

மேலும் இந்த பகுதியில் ஏராளமான கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வேலைக்காக தர்மபுரி நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இந்த மக்கள் தினமும் கூலி வேலை செய்தால்தான் வருமானம் கிடைக்கும் நிலை உள்ளது.

இந்தநிலையில் நாயக்கனஅள்ளி ஊராட்சி மற்றும் குப்பூர் ஊராட்சி எல்லையான மான்காரன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அருகில் டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த மதுபான கடை வந்தால் அந்த பகுதி தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து சம்பந்தப்பட்ட குடும்பம் வறுமையில் வாடும் சூழ்நிலை உருவாகும்.

மேலும் தர்மபுரி-மொரப்பூர் பிரதான சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story