சின்னம்பள்ளி பகுதிக்கு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


சின்னம்பள்ளி பகுதிக்கு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:30 AM IST (Updated: 14 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சின்னம்பள்ளி பகுதிக்கு டாஸ்மாக் மது கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இலக்கியம்பட்டி, சோகத்தூர் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில், தர்மபுரி புதிய தேசிய நெடுஞ்சாலையில் பிடமனேரி-பனந்தோப்பு செல்லும் இணைப்பு சாலை தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் இருந்து தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

பென்னாகரம் தாலுகா அரகாசனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், சின்னம்பள்ளி கிராமத்திற்கு உட்பட்ட ராசி ராவுத்தனஅள்ளி மற்றும் கள்நாயக்கனூர் ஆகியவற்றுக்கு இடையே தற்போது டாஸ்மாக் மது கடை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மது கடையை சின்னம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதிக்கு மதுக்கடையை இடமாற்றம் செய்தால் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உருவாகும். எனவே இந்த பகுதிக்கு மது கடையை இடமாற்றம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இலவச வீட்டு மனை

பாலக்கோடு தாலுகா கெண்டேனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஒரே வீட்டில் 3 முதல் 4 குடும்பங்கள் வசிப்பதால் இட பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே அரசின் சார்பில் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.


Next Story