கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மனு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பினர் கேப்டன் கிருஷ்ணன் தலைமையில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் இந்திய ராணுவத்தில் சேவைபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதில், நாடு முழுவதும், 32 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள். இதில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணை, 7, 8 பத்திகளில் தளர்வுகள் அளித்து அனைத்து ஓய்வூதியர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும்.
மேலும் ராணுவ சேவை ஊதியமானது அதிகாரிகள், அலுவலர்கள், வீரர்களுக்கு வழங்குவதில் மாறுபாடு உள்ளது. இதையும் நீக்க வேண்டும். பணியில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் மற்றவர்களை போல் பென்சன் வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் இறந்த நிலையில் வழங்கப்படும் விதவை பென்சனில், அடிப்படை ஊதியத்தில், 60 சதவீதம் வழங்க வேண்டும். கடந்த, 2006-ம் ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் ஓய்வுபெற்ற ஜூனியர் கமிஷன் அலுவலர்களுக்கு இந்த பென்சன் சலுகைகள் கிடைப்பதில்லை. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலுவைத்தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது முன்னாள் படைவீரர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரகாஷ், மாதவன், ஆறுமுகம், சுபேதார் சடகோபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.