கிருஷ்ணகிரி வேணுகோபால சாமி கோவில் குளத்தை தூர்வார வேண்டும்-கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி இந்து முன்னணி நகர துணைத் தலைவர் முரளிதரன் தலைமையில், நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேர்நிலை தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் கட்டியதாகும். இக்கோவிலுக்கு அருகில் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. இந்த ராயர் குளமானது பல ஆண்டுகளாக பராமரிப்பற்று, பாழடைந்து கிடப்பதோடு, தற்போது முழுவதுமாக சாக்கடை நீர் தேங்கி குட்டையாக மாறி அழியும் நிலையில் உள்ளது.
இறந்த விலங்குகளை குளத்தில் துாக்கி எறிவது தொடர்கதையாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைக்கு ஆதாராமாக விளங்கிய இந்த ராயர் குளம் தற்போது அனைத்து நீர்வழித்தடங்களும் அடைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த குளத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து, தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.