பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு


பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு
x

பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, திருவாளந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமையில் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், எங்களது கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு பெருமை காண இருக்கும் பள்ளியாகும். பள்ளியின் பெயரில் பட்டாவும் உள்ளது. இந்நிலையில், கிராமத்திலுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்த காரணத்தால், புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு அங்கேயே போதிய இடவசதி இருந்தும், அரசு ஆணைக்கு எதிராக எவ்வித அனுமதியும் பெறாமல் பள்ளிக் கல்வித்துறைக்குச் சொந்தமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்புகள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆட்சேபனை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகத்துக்குள் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தடை பிறப்பிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா, நன்னை கிராம மக்கள் சார்பாக நல்லம்மாள் கொடுத்த மனுவில், நன்னை கிராமத்தில் நீர் நிலைகளை சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராம மக்கள் சார்பில் செல்லத்துரை கொடுத்த மனுவில், இரூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பாளையம் ஏரியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி ஒருவன் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் உதயசூரியன் என்பவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

367 மனுக்கள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 367 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி பெற்றார். மேலும் அவர் நாட்டார்மங்கலத்தை சேர்ந்த 3 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் தற்காலிக இயலாதோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.


Next Story