நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்விவசாய முன்னேற்ற கழகத்தினர் கலெக்டரிடம் மனு


நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்விவசாய முன்னேற்ற கழகத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 23 May 2023 12:30 AM IST (Updated: 23 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

தமிழகத்தில் இறுதியாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மோகனூர் தாலுகா வளையப்பட்டி பகுதியில் சிப்காட் எக்காரணத்தை கொண்டும் அமைக்க கூடாது. இங்கு சிப்காட் அமையும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும் சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் உடைய எந்தவிதமான புள்ளி விவரங்களும், சிப்காட் நிறுவனத்திடம் இல்லை என தெரிகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இறுதியாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அவசர கதியில் தமிழக நில ஒருங்கிணைப்பு சட்டம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை, நீர்வரத்து கால்வாய்கள், விவசாய நிலங்கள், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. எனவே இச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

மானியத்தொகை

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் அமைப்பதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு விவசாய நிலங்களில் பைப்லைன் அமைப்பதற்கு குழி தோண்டுவதற்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. ஆனால் இதை சில அதிகாரிகள் விவசாயிகளுக்கு கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவருகிறது. எனவே இதுபோன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து, உடனடியாக மானியத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரத பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு மூன்று, நான்கு தவணைகள் பணம் கிடைக்கவில்லை. இதற்கு விவசாயிகளின் பெயரில் விட்டுபோன சில எழுத்துக்கள், சர்வே எண்களில் சில மாற்றங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்யாமல் இருப்பது காரணம் என தெரியவருகிறது. எனவே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story