விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் குமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கட்டுமான வாரிய கூட்டத்தில் முத்தரப்பு கமிட்டி ஏற்றுக்கொண்ட வாரிய கூட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கட்டிட கட்டுமான தொழிலாளர்களின் நலவரி சட்டத்தை எந்த சட்டத்தொகுப்புடனும் இணைக்கக்கூடாது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும், மாநில கட்டுமான தொழிலாளர் நலவாரியங்களை சீரழிக்கக்கூடாது, கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், நாராயணன், வேலு, செல்வக்குமார், வெங்கடேசன், சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.