காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.
வள்ளியூர்:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராதாபுரம், சமூகரெங்கபுரம், சீலாத்திகுளம், வள்ளியூர், கோட்டையடி, பணகுடி, கலந்தபனை, ராமலிங்கபுரம், காவல்கிணறு, இருக்கன்துறை, நம்பி தளவாய்புரம், ஆனைகுளம், திசையன்விளை, பழவூர், சங்கனாபுரம் மற்றும் செட்டிகுளம் உள்பட பல்வேறு கிராமங்களில் காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த தாங்கள் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து வருகிறோம். எங்கள் சமுதாய வழக்கப்படி காட்டில் வேட்டையாடி அதில் கிடைக்கும் பொருட்களை கிராமப்புறங்களில் விற்றும், பன்றிகளை வளர்த்தும் தொழில் செய்து பிழைத்து வருகிறோம். காலம் காலமாக நாடோடியாக வாழ்ந்து வந்த வழி தோன்றலான நாங்கள் தற்போது நிரந்தரமாக தற்காலிக குடில் அமைத்து குடியிருந்து வருகிறோம். எங்களது குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. நஞ்சை, புஞ்சை நிலங்களும் இல்லை. எங்களது குழந்தைகள் படிக்க வைத்து வருகிறோம். அவர்களது மேல் படிப்பை தொடர அவர்களுக்கு சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. படித்த குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே எங்களுக்கு இந்து காட்டுநாயக்கர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து விரைவில் கோரிக்கை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார்.
அப்ேபாது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நெல்லை மாவட்ட கலைஞர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் பழவூர் இசக்கியப்பன் மற்றும் பலர் உடன் சென்றனர்.