அண்ணா பூங்கா நிறுத்தத்தில் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் மனு


அண்ணா பூங்கா நிறுத்தத்தில்  அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்  கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் மனு
x

சேலம் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தத்தில் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் மனு கொடுத்தனர்.

சேலம்

சேலம்,

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கலெக்டர் அலுவலகத்துக்கு சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து மாணவிகள் கூறும் போது, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான தங்கும் விடுதி 4 ரோடு அருகே உள்ள அண்ணா பூங்கா பின்புறம் உள்ளது. தினமும் அரசு பஸ்கள் மூலம் கல்லூரிக்கு சென்று வருகிறோம். ஆனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பல டவுன் பஸ்கள் அண்ணா பூங்கா அருகே நிற்பதில்லை. இதனால் எங்களால் உரிய நேரத்திற்குள் கல்லூரி செல்ல முடியவில்லை. மேலும் சில கண்டக்டர்கள் இலவசமாக பயணம் செய்வதால் தங்களை ஏளனமாகவும் பேசுகிறார்கள். எனவே அண்ணா பூங்கா நிறுத்தத்தில் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நிலப்பிரச்சினை

சேலம் முங்கப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசமுத்து. இவர் நேற்று தனது மனைவி தனம் மற்றும் உறவினர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், நிலப்பிரச்சினை தொடர்பாக எனது குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story