போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீனவ பெண்கள் மனு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீனவ பெண்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பெண்கள் பலர் சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தனர். அதில், தனியார் நகை கடன் நிறுவனத்தில் நகையை அடகு வைத்து பணம் பெற்றோம். இந்த நகைகளை அந்த நிறுவனம் மறு அடகு வைத்து கூடுதல் தொகை பெற்று அடகு வைத்தவர்களுக்கு நகையை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. திடீரென்று நிறுவனத்தை மூடி தலைமறைவாகிவிட்டனர்.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு நகையை திருப்பி கொடுக்க சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரை செய்தது. இந்த சமரச தீர்வு மையத்தில் அளித்த வாக்குறுதிப்படி நகையை திருப்பி கொடுக்கும் வகையில் நிறுவனத்தினர் நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகையை பெற முடியாமல் தவிக்கிறோம். எனவே, நகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார். தங்களின் நகைகள் திரும்ப கிடைக்காவிட்டால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மீனவ பெண்கள் கூறினர்.