சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நகைக்கடன் தள்ளுபடி கோரி இலங்கை தமிழர்கள் கலெக்டரிடம் மனு


சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:  நகைக்கடன் தள்ளுபடி கோரி   இலங்கை தமிழர்கள் கலெக்டரிடம் மனு
x

சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி கோரி இலங்கை தமிழர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம்

சேலம்,

நகைக்கடன் தள்ளுபடி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

சேலம் சித்தர்கோவில் சத்யாநகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் கரிச்சிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு குறைவாக நகையை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளோம். தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதில் தகுதிவாய்ந்த பயனாளிகளாக நாங்கள் உள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மற்ற இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்தவற்காக ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதிவாய்ந்த எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மண்எண்ணெய் பாட்டிலுடன்...

சேலம் வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் இளமகவுண்டர். இவருடைய மனைவி ஆனந்தாயி. இவர்கள் நேற்று தங்களது மனவளர்ச்சி குன்றிய மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களது பையை சோதனை செய்தனர்.இதில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்து இளமகவுண்டரிடம் விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர் கூறும் போது, 'எனக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதை தடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்யும் நோக்கத்தில் எனது மனைவியுடன் வந்தேன்' என்றார்.

இதேபோல் இரும்பாலையை சேர்ந்த பூங்கொடி (40) என்ற பெண்ணும் குடும்ப பிரச்சினை காரணமாக மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் இருந்தும் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story