குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மனு
குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.
குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் 42 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும், படைவீரர் கொடிநாள் வசூல் அதிக அளவில் செய்ததற்காக தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமாருக்கு, தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கத்தை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
காலிக்குடங்களுடன் மனு
இந்த கூட்டத்தின்போது, மனு கொடுப்பதற்காக போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை. 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமமான புதூருக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. எங்கள் பகுதிக்கு தெரு விளக்கு, மின்சார வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அணைக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை கலெக்டர் பார்வையிட்டு, குடிநீர் வசதி உள்ளிட்ட எங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பூதிப்புரத்தை சேர்ந்த கேரளபுத்திரன் என்பவர் கொடுத்த மனுவில், "எங்கள் ஊரில் தார்சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
மகளிர் உரிமைத்தொகை
பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பாரபட்சம் இன்றி அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ராஜதுரை கொடுத்த மனுவில், "தேனி-பூதிப்புரம் சாலையோரம் கொட்டக்குடி ஆற்றில் தனிநபர் பாலம் கட்டி வருகிறார். வெள்ளப்பெருக்கால் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.