பட்டா வழங்கக்கோரி கிராமமக்கள் மனு


பட்டா வழங்கக்கோரி கிராமமக்கள் மனு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா வழங்கக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மந்தை புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக 54 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் வீடுகளுக்கு உரிய பட்டா இன்னும் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 54 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்கியும், மின்விளக்கு, தார்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குளித்தலை அருகே உள்ள மேல சுக்காம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நெற்பயிர்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். நங்கவரம் வேளாண்மை துறையில் பொன்மணி என்ற விதைநெல் கேட்டு வாங்கி விதைத்தேன். தற்போது அளித்தும் அந்த விதைநெல் போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

குண்டும், குழியுமான சாலை

ஏமூர் பகுதிக்குட்பட்ட கற்பகநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், கற்பகநகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் மட்டும் போட்டு பணி தொடங்கியது. தற்போது வரை அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வேகத்தடை வேண்டும்

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆத்தூர் பிரிவு பகுதியில் 3 ரோடுகளை இணைக்கும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாகதான் ஈரோடு, வேலாயுதம்பாளையம், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. பிரிவு சாலை வழியாக அதிக வானங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், மேலும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களில் நடக்கும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

சுற்றுச்சூழல் பாதிக்கும்

இதேபோல், ஓந்தாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக சிமெண்டு ஆலை அமைக்க உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும் இப்பகுதியில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story