டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேத்திரபாலபுரம் காவிரி கரையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

சேத்திரபாலபுரம் காவிரி கரையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தை சேர்ந்த ஆதவன், ரங்கபாட்சியம், வைத்தி, விமல், சதீஷ் உட்பட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் ஊராட்சியில் கும்பகோணம் சாலையையும், கல்லணை சாலையையும் இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த சாலை அந்த பகுதியை சுற்றியுள்ள 15 கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது.

காலபைரவர் கோவில்

அந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சேத்திரபாலபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதுமாக விவசாயம் சார்ந்த பகுதி.

இந்த பகுதியின் அருகிலேயே புகழ் பெற்ற காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரியில் புனித நீராடி விட்டு செல்கின்றனர்.

உடனடி நடவடிக்கை

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மதுபான கடை அமைய விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் செல்போன் மூலம் பேசினார். அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் மதுபான கடை ஏதும் திறக்க கூடாது என்று உத்தரவிட்டார்.தங்கள் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.


Next Story