விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாகும். இங்கு மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் தாலுகா அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா விவசாயிகள் 2020-2021, 2021-2022-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமைத்தொகை செலுத்தி உள்ளனர். மேற்கண்ட காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தொகை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரிகளால் முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து வறட்சி நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டிய அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.