குடியிருப்பு கேட்டு பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் மனு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடியிருப்பு கேட்டு பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி,
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடியிருப்பு கேட்டு பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குடியிருப்பு வசதி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். கூடலூர் அருகே சேரங்கோடு வெல்லாரங்குன்னு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் குடியிருப்பு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சேரங்கோடு ஊராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட காவயல், வெல்லாரங்குன்னு, மலைப்புட்டு பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டது. அவை தரமற்று கட்டப்பட்டதால், பூர்வ குடிமக்களுக்கான குடியிருப்பு வசதி சேதமடைந்ததோடு, குடியிருக்க முடியாத நிலைமை உள்ளது. தற்போது 30-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருப்பு இல்லாமல் மழை காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி சுற்றுலா கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பைக்காரா அணைக்கு சென்று அங்குள்ள அணையில் படகு சவாரி செய்கின்றனர். படகு இல்லம் செல்ல வனத்துறை சார்பில் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த படகு இல்லம் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் உள்ளது.
107 மனுக்கள்
இதனால், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 107 கோரிக்ைக மனுக்கள் பெறப்பட்டன.